Archive for அரசியல் , பொது

பல்கலைக்கழகப் பிச்சை

 மாநில ஆட்சிகளீன் மும்மூர்த்திகளுக்கு ,

‘ கவுரவ டாக்டர் ‘ பட்டம் வழங்கியிருப்பது , சரியான காமெடிங்க ..!
டாக்டர் பட்டங்கள் மதிப்பிழந்ததற்கு ,இத்தகு கூஜா தூக்கலே காரணம் .

பட்டங்கள் , எத்துறையிலேனும்  சாதித்தவர்க்கு தரப்படும் .
கலைஞருக்காகவது , தமிழிற்காய்  தந்தோம் என சாக்கிடலாம் ..!
சோனியா காந்தியும்  , மன்மோகன் சிங்கும் சாதித்தது என்ன …?
பன்னிரண்டு சதவீத  பணவீக்கத்தை  எழுப்பியமைக்கென்றால் , சரியெனலாம் ..!

பல்கலைக் கழகத்தின் கண்ணுக்கு , அதிகாரமும் , பதவியுமே  தென்பட்டிருக்கிறது ..!

உண்மையில் , மன்மோகன் சிங்கிற்கு தரவே ,இவர்கட்கு தோணியிருக்காது .
ஆனால் , பிரதமருக்கே இல்லையென்று விட்டு , எப்பதவியுமில்லா சோனியாவிற்கு தந்தால் , கணக்கில்  உதைக்குமே என , மன்மோகனை சேர்த்து விட்டனர் போலும் ..!
பாவம் , ‘ எகனாமிக்ஸ் கிங் ‘ …மன்மோகன் சிங் ..! பிரதமராக ஆசைப்பட்டால் , இதுவும் வேண்டும் , இன்னமும் வேண்டும்தான் ..!

பட்டங்கள் , வளரும் மாணவர்கென்றால் , மிக நல்லதெனலாம் .
அறுபதை தாண்டும் சோனியாவும் , எழுபதிலிருக்கும் மன்மோகனும் , எண்பத்தைந்திலிருக்கும் முதல்வரும் , கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றுச் சாதிப்பது என்ன …?

அதிகாரமிருந்தால் , அரசியல்வாதியாயிருந்தால் , எந்த வயதிலும் பட்டங்கள் பெறலாமென்பதே , இதனால் தெளிவாகிறது .

முதல்வரின் பேச்சோ , அதை விட அபத்தமாயுள்ளது .
தள்ளாத வயதிலும் , தமிழெழுதுவதற்காய் , முதல்வருக்குத் தரலாம் . பாராட்டலாம் .
ஆனால்  , முதல்வரோ …
பட்டம் பெற்றதும் , கிரிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு சந்தேகங்கள் தீர்க்கப்படுமென்கிறார் .
அருந்ததியர்க்கு , தனி ஒதுக்கீடு வழங்கபடுமென்கிறார்.
இதுவா , இளைஞர்க்கு சொல்லும் ஊக்க வார்த்தைகள் ..?

படிப்பில் … விடா முயற்சி , கடும் உழைப்பைக் காட்டுங்கள் எனச் சொல்லாமல் ,
கிரிஸ்தவர்க்கான இட ஒதுக்கீடைத் தருவோம் ; இடம்  ஒதுக்குவோம் என்கிறார் .
அதுவும் , கிரிஸ்தவரான , சோனியாவை வைத்துக் கொண்டு சொல்கிறார் ..!
போததற்கு , பட்டத்தை வாங்கிக் கொண்டு , பட்டம் தந்த பல்கலைகழகத்திற்கு , இத்தனை கோடி நிதி ஒதுக்கீடு  அறிவிக்கிறார் .
ஆக , பட்டமளித்தவர்க்கு பிச்சை அளிக்கிறார் என்றுதானேங்க  அர்த்தம் ..!

டாக்டர்கள் அளிப்பது உயிர்ப் பிச்சை ; பல்கலைக்கழகங்கள் எடுப்பதோ , பணப் பிச்சைங்க..!

Leave a comment »

வாரிசுகள் – from ச. பிரசன்னா

வாரிசுகள் பற்றிய விசித்திரங்கள் , நம் அரசியலுக்கே பொருந்தும் .
நேருவின் வாரிசாய் , இந்திரா காந்தி வந்தது ; ஆண்டதும் ..அனைவருமறிவார் .
இந்திராவிற்குப் பின் , ராஜிவ் காந்தி .
ராஜிவிற்குப் பின் , சோனியா காந்தி என  காங்கிரசே , வாரிசுக் கட்சியானது தெரிந்ததுதான் .
கலெக்டர் அலுவலகத்திற்குப் போனதாலேயே , ‘ இளவரசன் ;.,ஆக , ராகுல் காந்தி அரியணைக்கு தகுதியானவரும் ஆகிவிட்டார் .
ஆமாம் . தந்தையின் பேருக்கு , தனயன்கள் சொந்தம் கொண்டாடலாம் ..
‘ காந்தி ‘ என்ற பேருக்கு , இந்திரா தொட்டு ராகுல் வரை , எப்படிச் சொந்தமாவார் ..?

எம்.ஜி. ஆரின்  ., ஒட்டு வங்கி ,  ‘ ஜெ ‘ விற்குத்தான் என்பதை , ஏழு கட்சிக் கூட்டணியை எதிர்த்தும் , 61 இடங்களில் அ .தி . மு .க .,வென்றதே உணர்த்துகிறது .
நிதர்சனங்கள் சொல்வதென்ன ,….?
இந்திய அரசியலில் , வாரிசில்லா தலைவர்களுக்கே , இன்றளவும் நிரந்தரப் புகழ் நிலைக்கிறது .
வாரிசுகள் பற்றிய , ஒரு விசித்திர ஒற்றுமையையும் சற்று பாருங்களேன் …!
 தமிழக அரசியலாரின் ஆதர்ச தலைவர்கள் எவருக்குமே , நேரிடையான வாரிசுகள் இல்லையென்பதுதான் …!
காமராஜர் , பெரியார் ,  அண்ணா  , எம் . ஜி . ஆர் , ஜீவா , முத்துராமலிங்கத் தேவர் , என எவருக்குமே , நேரிடையான வாரிசுகளில்லை என்றானது , தமிழகத்தின் சாபக்கேடுதான் .
ராஜாஜிக்கோ , பெண் வாரிசுதான் உண்டு ; அவரும் , அரசியல் பக்கமே வந்ததில்லை .

போததற்கு , நினைவிற்கிருக்கும் வரை , இப் பெரும் தலைவர்கள் எவரையுமே , தங்களது வாரிசு என அறிவித்ததுமில்லை . அதுவும் , வாரிசாகப் பேசுவோர்க்கு , வசதியாகி விட்டது .
பொதுவாய் , சாதாரண பெட்டிக் கடைக்காரருக்கும் , வாரிசு வளர்க்கும் ஆசையிருக்கும் .
ஆனால் , இப்்பெரும் தலைவர்களுக்கு , எவ் வாரிசுமில்லாது போனது , வாரிசு உரிமை கொண்டாடுவோர்க்கு , கொண்டாட்டமாகிவிட்டது .
நாந்தான் வாரிசு , குருகுலக் கொழுந்தென , ஆளாளுக்கு ஆர்ப்பரிப்பதே , வழக்கமாகி விட்டது .

தி . மு . க ., வைப் பொறுத்த மட்டில் ,
அண்ணாவைச் சொல்லி , கலைஞர் வந்தார் ; ஐந்து முறை  அரசாண்டும் விட்டார் .
ஆனால் , மகனுக்கு மட்டுமன்றி , பேரன் வரை பதவி பெற வழி வகுத்தவர் , கலைஞரேதான் .
பதவிக்கு வர தயா நிதி  மாறன் , கனிமொழி  போன்றோரின் , அரசியல் பங்களிப்புக்கள் என்ன ?
கலைஞரின் உறவு என்ற , ஒரே தகுதிகள்தான் . இல்லையென , தி .மு . க .,வே மறுக்காது .
ஸ்டாலின் , அழகிரிக்களீன் வாரிசுகளான , உதய நிதி , தயாநிதிக்களீன் வாரிசுப் போர் .அடுத்தத் தலைமுறை தி .மு. க .,வுக்கு  தொடரும் ; பரவும் .

வாரிசு வளர்த்தல்  , உலக மயமாக்கப்பட்டு விட்ட வழிதான் .
இன்றைய , அமெரிக்க அதிபர் ., ஜியார்ஜ் புஷ் .,ன் தந்தை  , முன்னாள் அதிபரான புஷ்தான் .
அடுத்த தேர்தலுக்கு போராடும் , ஹில்லாரியோ , முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவிதான் .
பெனசீர் புட்டோவின் , 19 வயதான பிலாவல் புட்டோவோ  , அறிவிக்கப்பட்ட வாரிசு .

ஆக ,, வாரிசில்லா அரசியலுக்கு , பழகாத மக்களிருக்கும் வரை ,  வாரிசுகள் வந்தபடியே இருப்பர்தான் . இதுவே , ஆசிய அரசியலின் சாபக்கேடு ..!

     ச. பிரசன்னா 

Leave a comment »

பிரசன்னா – அறிவிப்பு …!

 அறிவிப்பு …!

நமக்கான பயணங்கள்
ஏற்கனவே எழுதப்பட்டிருந்தும் …
நாம்தான்  எழுப்புகிறோமென …
ஏனோ  இறுமாறுகிறோம் ..?

இன்னார்க்கு இன்னாரென்று …
இறைவன் இறுதி செய்தாலும் …
எல்லார்க்கும் எல்லாமுமென …
ஏனோதானோவென அலைபாய்கிறோம் …!

வாழ்வதில்  இனிமையிருந்தும்
வாழ்வில்    இருத்திடாதிருந்து
மனம் போன போக்கிலெல்லாம்
புண்ணாகிப் போகின்றோம் …!

இனியேனும் அறிவோம் …?
எல்லாமும் சமமென்றால்  …
ஒவ்வொன்றும் சரியென்றால் …
எதற்கிந்த வாழ்வென்று …
வெறுத்திடுவோம்  நாமெல்லாம் …!

என்றிறைவன் அறிந்ததனால் …
புரிந்தவனாய் படைத்ததனால் …
வாழ்கையெனும் பாதையிலே …
எப்போதும் நிறைந்திருக்கும்
மேடுகளும் , பள்ளங்களும் …!
                            ச. பிரசன்னா 

Leave a comment »

பிரசன்னாவின் அரசியல் பார்வை

பா .ம.க. தலைவர் ராமதாசின் , தனியார்மயமாக்கலை எதிர்த்த , நிலமீட்பு போராட்டங்கள், சிரிக்கத்தான் வைக்கின்றன .  உத்தேசித்துள்ள தனியார் தொழிற்சாலைகள் , வன்னியரினம் பெரும்பான்மையாக இருக்கின்ற பகுதிகளீல் வருகின்றன .
அவர்கள் புலம் பெயர்ந்தால் , இருக்கும் ஆதரவையும் ,பா.ம.க .,  இழந்து விடும் எனபதே ,ராமதாசின் ‘ விவசாயி ‘ ஆதரவுப் போராட்டத்தின் அடிப்படைக் காரணம் .!

எப்போதும் , வளர்ச்சித் திட்டங்களின் போது , மக்களின் எல்லாச் சாராரையும் திருப்திபடுத்த முடியாது .
திருப்திபடுத்த முனைந்தால் , வளரவே முடியாது என்பதை உணராமல் ,எல்லாப் பிரச்னையையும் ,ராமதாஸ் அரசியலாக்குகிறார் .

எந்த பகுதியில் , வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் , எல்லாரும் இவரை அழைத்தாற் போல் ஒடோடிச் செல்கிறார் .
மக்களின் கருத்துக்களைக் கேட்கிறார் . நிலம் கொடுக்காதீர்கள் என்ற , தன் கருத்தைத் திணிக்கிறார் .

இவருக்கு கிடைப்பது , விளம்பரப் பெருமை .  ‘ நில மீட்புக் காவலர் ‘ என விரைவில் பட்டமும் சூட்டிக் கொண்டு விடுவார் ..!
விவசாயிகளுக்கோ , விற்க மனமிருந்தும் , நல்ல விலைக்கு விற்க முடியாத கொடுமைதான் ஏற்படுகிறது .

காய்கறிகளின் , விலையை ஏற்றினால்தான் , விவசாயிக்கு லாபம் .
காய்கறி , குறைந்த விலைக்கு விற்றால்தான் , பொது மக்களுக்கு லாபம் .
இது சமுகத்தின் நியதி .

ராமதாஸ் , விவசாயியை , நிலத்தை விற்காதே என ஊக்கப்படுத்துவார் .
அரசாங்கத்தை , காய்கறி விலையை கட்டுப்படுத்தாமல் , ஏழை மக்களின் வயிற்றீல் அடிக்காதீர்கள் என லாவணி பாடுவார் .

இரட்டை வேடங்களினால் , இரட்டை வித லாபம் அடைய பார்க்கிறார்கள் , இன்றைய அரசியல்வாதிகள் என்பதற்கு , இராமதாஸ் ஒரு நல்ல உதாரணம் .

ச . பிரசன்னா ,

Leave a comment »

பிரசன்னாவின் சமீப அரசியல் பார்வை

மருத்துவப் படிப்பை ஆறரை ஆண்டாக நீட்டித்திருக்க உத்தேசித்திருப்பது , சரியான கேலிக் கூத்து .
எந்தத் துறையாயினும் , அது சார்ந்தவரே அத்துறைக்கு அமைச்சாரயிருப்பது   நியாயாமாய்   இருக்காது . ஏனெனில் , எடுக்கபடும் முடிவுகள் …ஏதோ ஒருவிதத்தில் , சம்பந்தப்பட்டவ்ருக்கு சாதகமாகும் அபாயம் இருக்கின்றது .
                நம் கூட்டணி அரசியலால் ஏற்பட்ட விபத்தில் ஒன்றுதான் , எத்தனையோ அனுபவமிக்க , திறமைமிக்க மருத்துவர்களிருந்தும் , அன்புமணி என்ற மருத்துவருக்கு மட்டும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது .
அதனால் ஏற்பட்ட விபத்துகள்தான்  ‘ஜிப்மர் ‘  , டில்லி ‘ எய்ம்ஸ் ‘ , மருத்துவருக்கு கிராமப்புறச் சேவை என்பவை ..! . உயிர் காக்க வேண்டிய மருத்துவர்கள் , தெருவில் இறங்கி போராடும் நிலைகள் தேவைதானா …?
பேச்சு வார்த்தையில் , ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்றிருக்கிறார் அன்புமணீ ராமதாஸ் ; மறு நாளோ , எந்த முடிவிலும் மாற்றமில்லை என்கிறார் .
ஏன் ..? மருத்துவம் வியாபாரமாகி விட்டதோடு அரசியலும்  கலந்ததாய் போனதால்தான் .!
மருத்துவத்தை முழுதுமாய் கற்பதர்காய் , நீட்டிப்பு என்றால் எவருமே இரு கை தட்டி வரவேற்கலாம் .
இவரோ .., 
மருத்துவம் என்னும் மாக்கடலில்  , தனித்து , முதன்முறையாய் காலை நனைக்கப் போகும்  புது மருத்துவரை , கிராமச் சேவை செய்யுங்கள் என்கிறார் .
ஏனய்யா ..?  கிராமப் புற மக்கள் உயிரும் ,ஆரோக்கியமும் , அத்தனை இளப்பமாகி விட்டதா ..?

அனுபவமுள்ள , ஆற்றலுள்ள , ஏற்கனவே லட்சாதிலட்சமாய் சம்பாதித்த ..மருத்துவர்களூக்கு , கிராமப்புறச் சேவையை கட்டாயமாக்குவதுதானே ..?
எந்த  ஒரு நோயாளீயும் , டாக்டரின் கைராசியை பார்ப்பான் ; அவரது , வயதை வைத்து , அவ்ரது அனுபவ ஞானத்தை வைத்துத்தான் , மருத்துவம் பார்க்கவே சம்மதிப்பான் .
படிப்பையே முடிக்காத இளைஞர்கள்தான் மருத்துவரென்றால் , மருண்டு ஒடத்தான் செய்வார்கள் .

இதற்குப் பேரா சேவை ..? ஏற்கனவே இருக்கின்ற  மருத்துவமனைகளீல் , இல்லாத மருத்துவர்களை நியமித்தால் , அது சாதனை .  இவர் செய்வதோ , வேதனை . அரசியலால் வந்த சோதனை .
ஆகவே , அனுபவமான டாக்டர்களுக்கு கிராமப்புறச் சேவை செய்ய விதிகளை விதிப்பதே சரியானது .
செய்வாரா அன்புமணீ ..?
அதை நிருபிக்க , அனுபவமுள்ள அவரே , முதலில் கிராமத்திற்குச் சென்று சேவை செய்யத் துவங்கலாமே ..?                                  

-        ச. பிரசன்னா 

Leave a comment »

பிரசன்னாவின் புதிய பார்வை .

   கனிமொழியின் பதவி .

முதல்வர் கலைஞரது ,டெல்லிப் பயணத்தினாலான ‘ நதி நீர் ‘ இணைப்பு பற்றிய கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கவைதான் .
 டெல்லி பயணம் பயனுள்ளதுதான் .ஆனாலும் , ஒரு சந்தேகம் எழுகிறது .
உணமையில் , நதி நீர் இணைப்பா ., கலைஞரது பயணத்திற்கு காரணம் ..?
மகளுக்கு , தந்தை ஆற்றும் கடனாக எம். . பி. பதவியும் தந்துவிட்டார் .
மந்திரி பதவியும் , மகளூக்கு வாங்கித் தராமல் இருப்பாரா என்ன ….? ராசாவுக்கே உண்டென்றால் கனிமொழி என்ன சும்மாவா ..?
திருச்சி சிவாவும் , தன் வாயை உளறி விட்டார் . எந்தவொரு தி,.மு.க  எம் . பியின் பதவி ஏற்புக்கும் , கலைஞர் வந்ததில்லையாம் ; இவர்களுக்குத்தான் வந்திருக்கிறாராம் . 
சிறப்பிக்கக் காரணமே , சிவா நீயில்லையப்பா …? கனிமொழி .கலைஞர் பெற்ற மகளப்பா . . .!

போதாததுக்கு ,  நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க , மன்மோகன் சிங் ஒரு திட்டம் வைத்திருக்கிறாரா என்றும் முதல்வர் கலைஞர் சொல்கிறார் .
எந்தவொரு பிரச்னைக்கும் , உடனே கலைஞர் கடிதம் எழுதுவார் ; அதன் நகலையும் , பத்திரிக்கைகள் வெளியிடும் . இதுதானே வழக்கம் .
நேரில் , மன்மோகன் சிங் சொன்ன ரகசிய ‘ மாஸ்டர் பிளானை ‘ வெளியிடக் கூடாதா . .?
நதி நீர் ் தகறார்களுக்கு முடிவு கட்டலாமே ..? மாட்டவே மாட்டார் .

கனிமொழிக்கான …மந்திரி பதவிக்கு அடி போட்டிருக்கிறார் . கிடைத்ததும் ,
அத் திட்டம் பற்றி , ஒரு துளி வேண்டுமானால் கிடைக்கலாம் .
நதி நீரோ ,, அந்த துளி அளவும் கிடைக்காது .

ஆக , தபால் , தகவல் தொழில்நுடப்த் துறை , தி .மு .க ‘விற்கே குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது .
மந்திரிகளை மாற்றும் உரிமை , பிரதம்ருக்கில்லை ..? கலைஞருக்குத்தான் ..!
இது தி . மு. விற்கு கவுரவ்மான மாற்றம்தான் .
ஆனால் , காங்கிரஸுக்கோ , அவமானகரமான மாற்றம் .
ஐ . டி. துறை என்பது ,வளர்ச்சியின் உச்சத்திலிருக்கும் துறை . நவீன உலகில் , ஒரு ஐ . டி. துறை அமைச்சரின் அதிகாரமும் , விளம்பர ஆதாயங்களூம் கணக்கில்லாதவை .

சோனியாவை மிஞ்சும் அளவு அதிகாரம் , வேறு காங்கிரஸ்காரர்க்கு கிடைக்கக் கூடாது என்பதே சோனியாவின் குறிக்கோள் . விளைவு ..?
ஆளும் கட்சியான காங்கிரஸ் , ஐ .டி . துறையை , தானே வைத்துக் கொண்டு , ஆதாயமடையாமல் , வெறும் 15 எம். .பி. க்களை கொண்ட் தி . மு. க விற்கு தந்திருக்கிறது .

36 எம். . எல். ஏக்களிருந்தும் , தமிழகத்திலோ , ஆட்சியில் பங்கு கேட்டு திருவோடு ஏந்திக் கொண்டிருக்கிறது .

கர்ம வீரரின் காங்கிரஸுக்கு ….

 என்னே பெருந்தன்மை . . .!

                                                            ச. பிரசன்னா 

Leave a comment »

பிரசன்னாவின் அரசியல் பார்வையும் & அரசாங்க குத்தாட்டமும் …!

குத்துப் பாட்டுக்காரன் ..

 குத்து பாட்டு …
 இலவசமா . . .
 பாடுவேனுங்கோ !
 இலவசமா இறைச்சதென்ன  ?
 சொல்லுறேனுங்கோ !

 கேஸ் அடுப்பு  இலவசமாம் …
 ரேஷன் அரிசி குறைச்சலுதான் …
 சிலிண்டர் வாங்க காசு இல்லையே ..?
 கனெக்ஷனுக்கு வழியுமில்லையே ..?

 இலவசமா  முட்டையாம் ..
 இஸ்கூல்ல  தருவாங்களாம் …
 பாலு விலை ஏறிடுச்சியா ? – கூட
 கறி  விலையும்  உசந்திடுச்சியா ..!

 ரயிலு ரேட்ஏறலைதான் ..
 ஏறி , போக ஆவலைதான் …
 பஸ்ஸு ரேட்டு மாறிடுச்சியா …!
 ஆட்டோ சார்ஜோ எகிறிடுச்்சியா …?

 விவசாயி வாழனும்னா …
 விலையை ஏத்தணும் …
 எழைபாழை வாழனும்னா …
 விலையைக் குறைக்கணும் ..!

 ஏழை  வாழத்தான் வழியுமில்ல  —  பண
 வீக்கம்தான் குறையவில்ல …!                                           
 பட்ஜெட்லாம்  போடுறாங்களாம் ..
 ஏழைக்கெல்லாம் கொடுக்கறாங்களாம் …  
          
 என்னதான் கொடுத்தாங்க …?                    
 ஏதுதான் கொடுத்தாங்க …?                                  
         தெரிஞ்சாதான் சொல்லுங்களேன் … 
 பணப் புழக்கமாக செய்யுங்களேன் …!
                                                   ச. பிரசன்னா 

Leave a comment »

பிரசன்னா பார்வை .

வணக்கம் .
சேலம் கோட்ட துவக்கம் , இனிதாக நிறைவேறும் என செய்திகளீல் கண்டேன் .இது தமிழர்க்கு வெற்றியா …? இழிவான தோல்விதான் என அமைச்சர் வேலுவின்  ‘ அய்யா ‘  -விற்கு  தெரியாது போலும்  .?
கோட்டம் ( Division )  என்பது மண்டலம் ( Region ) என்பதற்குள் அடங்கிய ஒன்று .
அதனால் , சேலம் கோட்டம் அமைந்தாலும் , , திருவனந்தபுரத்தை தலைமையாக கொண்ட ‘ வெஸ்ட் கோஸ்ட் ‘ மண்டலத்தில்தான் அதிகாரம் இருக்கும் . வளர்ச்சித் திட்டங்கள் முதற் கொண்டு , எதுவுமே மண்டலத்தின் ஒப்புதல் இல்லாமல் நடக்க முடியாது .
பெயருக்கு , சேலம் கோட்டத்தை அமைத்து விட்டு , அதிகாரத்தை கேரளாவிற்கு தாரை வார்க்கிறார்கள் . மீண்டும் , தமிழன் பிச்சை எடுக்கப் போவதுதான் நிதர்சனம் . சேலம் மட்டுமல்ல , கோவை வரை . . . இம் மண்டலத்தில்தான் அடங்கும் என்றால் , வெற்றி அல்ல மொத்தமாகவே  அதிகாரத்தில் வெளியேற்றப்பட்டோம் என்றாகி விடும் . கேரளாவிற்கு , தானாக வந்த பரிசு இது . ராமதாஸ்  உபயத்தில் ,சேலத்தை கேட்டு , அதிகாரத்தை ஏலம் விட்டதால் வந்த பதவிசு இது .
ஏறத்தாழ கடந்த 8 வருடங்களாகவே , ரயில்வே துறை இணை அமைச்சகத்தை  பா .ம . க கட்சிதான் வைத்திருக்கிறது .
முதலில் , பெங்களுரை தலைமையாய் கொண்டு , தென்னக ரயில்வேயின் ஒரு பாதியை இழந்தோம் . வாயே திறக்காமல் , தாரை வார்த்த பெருமையும் அடைந்தோம் .
இப்போது , ‘ வெஸ்ட் கோஸ்ட் ‘ ரயில்வே உதயமாகிறது .  மீண்டும் , பா. ம . க வால்  இழப்பு மட்டும்தான் மிச்சம் .
பார்லிமெண்டில் அறிவித்தபடி , அகல ரயில் பாதை திட்டங்களீல் , செங்கல்பட்டு – விழுப்புரம் திட்டம் மட்டும்தான் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது .
இதனால் , தமிழர்க்கு என்னய்யா பிரயோஜனம் . . .? செங்கல்பட்டிற்கும் , விழுப்புரத்தையும் இணைக்க , ஆயிரக்கணக்கான பஸ் போக்குவரத்து இருக்கிறது ; பெரும்பாலானவர்கள் , அதற்காக ரயில் போக்குவரத்தை நாடுவதும் இல்லை .
 உண்மை என்ன  . . ?
ஆயிரம் சொன்னாலும் , பா.ம.க கட்சிக்கு பரவலான பலமும் இல்லை ; வளர்ச்சியும் தேங்கி விட்டாயிற்று . எனவே , ஒரளவு பரவலாயிருக்கும் தொகுதிகளில் , இவ்வாறான திட்டங்களை ஆரம்பிக்கிறார்கள் . நாங்களூம் இருக்கிறோம் என வீண் ஜம்பம் செய்கிறார்கள் . அவ்வளவுதான் .
இழப்பு என்னவோ தமிழ் நாட்டுக்குத்தான் . . .?
தென் மாவட்டங்கள் , வருடக்கணாக்காய் தவமிருந்தும் ஒரே ஒரு அகலப் பாதை கூட கிடைக்க வில்லை ; இனி  கிடைக்கப் போவதுமில்லை.
வடக்கே கேட்டால் சொல்வார்கள் . . . ?
 534 பேர் கொண்ட பார்லிமெண்டில் ,ஆறே ஆறு எம்.பி பதவிகள் கொண்ட பா . ம . க – விற்கு ரயில்வே இணை அமைச்சர் பதவி  விட்டுத்  தந்தோமல்லவா . .?
அதனால் , வளர்ச்சித் திட்டங்களை , நீங்கள் விட்டுக் கொடுங்கள் என்று  . .!
  நமக்கு இதுவும் வேண்டும் ; இன்னமும் வேண்டும் . . .!

                                                  பிரசன்னா 
                       

Leave a comment »